இந்தியா

ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பிரச்சாரத்தை தவிர்க்க ராகுல் காந்தி, பிரியங்கா திட்டம்?

செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்து கட்ட சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ், சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

காங்கிரஸ் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, பஞ்சாப் முதல்வரான கேப்டன் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக அவர் இந்த தேர்தலிலும் பிரச்சாரம் செய்யமாட்டார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் காங்கிரஸை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்யாமல் ராகுல் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரியங்காவுக்கும் ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்வதில் உடன்பாடில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘ராகுல் முற்றிலுமாகப் பிரச்சாரத்தை தவிர்க்காமல் தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு ஓரிரு கூட்டங்களில் கலந்து கொள்வார். எனினும், பிரியங்காவுக்கு உ.பி.க்கு வெளியே நடைபெறும் எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ள தற்போதைக்கு விருப்பம் இல்லை. எனவே, சோனியா ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் இரண்டு அல்லது மூன்றாவது கட்டத்தின் இறுதியில் பிரச்சாரம் செய்வார்’’ எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT