அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என சன்னி வக்ஃப் வாரியம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆனால் மற்றொரு மனுதாரரான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் (ஏஐஎம்பிஎல்பி) டிசம்பர் முதல் வாரத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தி, டிசம்பர் முதல் வாரத்தில் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். வழக்கைத் தொடர வேண்டாம் என்று சன்னி வக்ஃப் வாரியம் எடுத்த முடிவு எங்களை சட்டப்பூர்வமாக பாதிக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே பக்கம் உள்ளன ” என்று கூறியுள்ளது.
இதுகுறித்து ஏஐஎம்பிஎல்பி செயலர் ஜபர்யாப் ஜிலானி கூறும்போது, “டிசம்பர் 9-ம் தேதி வரை எங்களுக்கு அவகாசம் உள்ளது. அதற்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்வோம். மனு தாக்கல் செய்யும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார். – பிடிஐ