இந்தியா

லலித் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்: இன்டர்போலுக்கு கடிதம் அனுப்பியது சிபிஐ

செய்திப்பிரிவு

நிதி முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி இன்டர்போல் அமைப்புக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

கிரிமினல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படுவோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால் நிதி ஊழல் புகார் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள லலித் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர ஏதுவாகும். அவர் தற்போது லண்டனில் வசிக்கிறார்.

வரி ஏய்ப்பு, கருப்புப்பணம் குவிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு மத்தியில் கடந்த 2010-ம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். நிழல் உலக தாதாக்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் இந்தியா திரும்ப மறுத்து வருகிறார்.

ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடிப்படையாக கொண்டு லலித் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரும் கோரிக்கையை அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் கடந்த 11-ம் தேதி சிபிஐக்கு அனுப்பியது. இந்த கடிதத்தை இன்டர்போல் அமைப்புக்கு சிபிஐ தற்போது அனுப்பியுள்ளது.

சென்னை காவல் துறையிடம் கடந்த 2010 அக்டோபரில் பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் 2012 டிசம்பரில் அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் லலித் மோடி மீது வழக்கு பதிவு செய்தது.

SCROLL FOR NEXT