இந்தியா

அஜித் பவார் மனம் மாறியது ஏன்? - பின்னணியில் குடும்ப உறவுகள்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே அஜித் பவார் மனம் மாறிவிட்டதாகவும், ராஜினாமா முடிவெடுத்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவி விலகினார்.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே அஜித் பவார் மனம் மாறிவிட்டதாகவும், ராஜினாமா முடிவெடுத்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மனம் மாறிய அஜித் பவார்

அஜித் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கடந்த 2 நாட்களாகவே சரத் பவார் தீவிரமாக இருந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சகன் புஜ்பல், ஜெயந்த பாட்டீல், திலிப் வல்சா பாட்டீல், சுனில் தாக்கரே உள்ளிட்டோர் தொடர்ந்து அஜித் பவாரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக
அஜித் பவாரை சரத் பவாரின் சொந்த மருமகனும், சுப்ரியா சுலேயின் கணவருமான சதானந்த் சுலே ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது சரத் பவார் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது கட்சி ரீதியாக மட்டுமின்றி குடும்ப ரீதியாகவும் ஏற்படும் நிலை குறித்து சரத் பவார் விளக்கியதாக தெரிகிறது. சரத் பவாரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அஜித் பவார் உடனடியாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வீட்டுக்கு சென்று தான் ராஜினாமா செய்யவுள்ளதாகவும், தனக்கு வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார்.

இதை கேட்டு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்த பட்னாவிஸ் அதிர்ந்து போனார். ஆனால் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு அஜித் பவார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அஜித் பவார் ராஜினாமா முடிவெடுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT