உத்தரப் பிரதேச மாநிலத்தில், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு முறைகேடாக விற்கப்பட்ட நிலத்தை மீண்டும் மாநில தொழில் மேம்பாட் டுக் கழகத்துக்கு (யுபிஎஸ்ஐடிசி) திருப்பிக் கொடுக்கும்படி வருவாய் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
யுபிஎஸ்ஐடிசி-க்கு சொந்தமான நிலம் ராஜீவ் காந்தி அறக்கட்ட ளைக்கு மாற்றப்பட்டது குறித்து கேள்வியெழுப்பிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சோனியா குடும்பம் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், கவரிகஞ்ச் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வன்டித ஸ்ரீவஸ்தவா, அந்த நிலத்தை மீண்டும் யுபிஎஸ்ஐடிசி-யிடம் ஒப்படைக்குமாறு நேற்று உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “கவுஹர் கிராமத்தில் உள்ள அந்த நிலம் யுபிஎஸ்ஐடிசி-க்கு சொந்தமானது. அதை சட்டவிரோதமாக அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றியுள்ளனர்” என்றார்.
கடந்த 1983-ம் ஆண்டு கவுகர் கிராமத்தில் 65 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் மூடப்பட்டதால், கடனுக்காக அந்த நிலம் பல்வேறு நிதி நிறுவனங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அது ஏலத்துக்கு விடப்பட்டது. அப்போது அந்த அறக்கட்டளை அந்த நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.