நமது பெருமைமிகு அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு ஏராளமான உரிமைகளை அளித்திருக்கிறது. ஆனால், இப்போது மக்கள் அரசியலமைப்பின் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பேசினார்.
இந்திய அரசியலைப்பை ஏற்றுக்கொண்டு 70-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்கள்.
இந்தக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் நடந்துவரும் அரசியல் குழப்பம், அதில் மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தை இக்கட்சிகள் புறக்கணித்தன.
கூட்டுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. அதேசமயம், நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட பின், கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான மக்கள் சமத்துவத்தையும், நீதியையும் இழந்து வந்ததால் நாம் உரிமைகளை வலியுறுத்தி வந்தோம்.
ஆனால், இப்போதுள்ள நேரத்துக்குத் தேவையானது என்னெவன்றால் இந்த சமூகம் தங்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுவதாகும். நம்முடைய கடமைகளை நிறைவேற்றாமல் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.
நாம் இந்த தேசத்து மக்கள் என்ற வார்த்தையுடன்தான் அரசியலமைப்புச் சட்டம் தொடங்குகிறது. அதன் வலிமை, நோக்கம், ஊக்கம் ஆகியவற்றை உணர வேண்டும். நம்முடைய சந்திப்புகள், உரையாடல்களில் நமக்கிருக்கும் கடமைகளில் கவனம் செலுத்த முயல வேண்டும்.
இந்த தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி, உரிமைகளையும், கடமைகளையும் புரிந்துகொண்டு அதற்கு உரிய சமநிலையை வெளிப்படுத்தினார். இந்த நாட்டின் குடிமகனாகப் பெருமைப்பட வேண்டுமென்றால், நம்முடைய செயல்கள் எவ்வாறு தேசத்தை வலிமையாக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில். இந்தியருக்கான கண்ணியம், இந்தியாவுக்கான ஒற்றுமை என இரு முக்கிய மந்திரங்கள் உள்ளன. நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் என்பது புனிதமான நூல். இதில் நமது பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், சவால்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பைக் கட்டி எழுப்பிய முக்கிய சிற்பியான அம்பேத்கர், நாடு கற்பனை செய்துள்ள சுதந்திரம், ஜனநாயகத்தை நிலை நிறுத்தி வைத்திருக்க முடியுமா என்று மக்களிடம் கேட்டார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருந்திருப்பார்.
இந்த தேசம் தனது நல்லொழுக்கங்களை மட்டுமல்லாது, ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வலிமைப்படுத்தியுள்ளது.
நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட நாள் என்பதால் நாம் கொண்டாட வேண்டிய நாள். ஆனால், மும்பை தீவிரவாதத் தாக்குதல் இதே நாளில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்ததால், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நான் நினைவஞ்சலி செலுத்துகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ராஜேந்தி்ர பிரசாத், அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், பண்டிட் நேரு, ஆச்சார்யா கிர்பாலினி, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்துள்ள பெருமைகளையும் நினைவில் கொள்கிறேன்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.