பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக 170 தொகுதிகளில் போட்டியிடும் என பாஜக எம்.பி. அஸ்வனி குமார் சவுபே உறுதியாக தெரிவித்துள்ளார்.
பிஹாரில் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமட்டா கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், பாஜக 102 இடங்களில் போட்டியிட வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.
பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, “பாஜக 122 இடங்களில் மட்டுமே போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அஸ்வனி குமார் சவுபே கூறும்போது, “பாஜக சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடும். அதற்குக் குறைவான இடங்களில் போட்டியிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த நாட்டில் யாரும் அறிவுரை கூற முடியாது” எனத் தெரிவித்தார்