மனோகர் லால் கட்டார் 
இந்தியா

குருஷேத்திரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டப்படும்: ஹரியாணா முதல்வர் உறுதி

பிடிஐ

ஹரியாணா மாநிலம் குருஷேத்திர நகரில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக திங்கள் கிழமை அவர் கூறியதாவது, "குருஷேத்திரத்தில் பாரத் மாதாவுக்கு ஒரு கோயில் கட்டப்படும். அந்த புனித நகரம் இதன்மூலம் ஆன்மிக சுற்றுலாதலமாக மாற்றப்படும். ஜோதிசா - பிரம்மசரோவர் பகுதிகளுக்கு இடையே 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்படும். பின்னர் இது முக்கியமான கலாச்சார மையமாகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாற்றப்படும்" என்றார்.
ஹரியாணாவின் குருஷேத்திரத்தில் சர்வதேச கீத மஹோத்ஸவ் -2019 நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கியது. வரும் டிசம்பர் 10 வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.

இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மனோகர் லால் கட்டார் பாரத மாதா கோயில் அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறும்போது "குருஷேத்திர புனித நகரை முதன்மையான சுற்றுலா தலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுடன் இணைந்து குருஷேத்திர வளர்ச்சிக் கழகம், இன்னும்பிற சமூக, மத அமைப்புகள் நகரை கலாச்சார, ஆன்மிக மையமாக மாற்ற முயற்சித்து வருகிறது" என்றார்.

இதுதவிர அக்‌ஷர்தம் கோயில், இஸ்கான் கோயில், ஞான் மந்திர் போன்ற வழிபாட்டுத்தலங்களும் குருஷேத்திரத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

அடுத்த ஆண்டு, 2020-ல் சர்வதேச கீத மஹோத்ஸவ் ஆஸ்திரேலியாவில் மார்ச் மாதம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT