மும்பையிலுள்ள சொகுசு ஓட்டலில் நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தங்களுக்கு 162 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் தங்களை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைக்கவேண்டும் என்று 3 கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து 3 கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக் களும் பல்வேறு ஓட்டல்களில் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர் களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். அவர் களே 3 கட்சி எம்எல்ஏக்களின் ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை, பல்வேறு ஓட்டல்களில் தங்கி யிருந்த 3 கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்களும் ஓட்டல் கிராண்ட் ஹயாத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் 3 கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் அங்கு வந்தனர். என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஒருவர் பின் ஒருவராக ஓட்டலுக்கு வந்தனர், இதனால் அந்த ஓட்டல் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “நாங்கள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். 162 எம்எல்ஏக்கள் இங்கு கூடியுள் ளோம். மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதன் முதலாக எங்கள் 162 எம்.ஏல்.ஏ.க் களை காண மாலை 7 மணிக்கு கிராண்ட் ஹயாத் ஓட்டலுக்கு வரலாம்” என்று கூறியுள்ளார். சிவசேனா தலைவரின் இந்தப் பதிவால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது சரத் பவார் கூறும்போது, “சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக தலைமையிலான அரசால் முடியாது. நாங்கள் இங்கு மகாராஷ்டிர மக்களுக்காக ஒன்று கூடியுள்ளோம். எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும்போது 162-த்துக்கும் அதிகமான எம்எல்ஏக்களின் பலம் உள்ளது என்பதை அவையில் நிரூபிப்போம்” என்றார்.
அப்போது காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கூட்டணிக்கு 162 எம்எல்ஏக்களும் ஆதரவு உள்ளது என்பதை தெரிவிக்கும்விதமாக அனைத்து எம்எல்ஏக்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் பாஜகவின் தூண்டுதலின்பேரில் யாரும் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்படமாட்டோம் என்றும் உறுதி அளித்தனர்.
- பிடிஐ