அயோத்தி பிரச்சினையை காங்கிரஸ் நீண்ட காலத்துக்கு முன்பே தீர்த்திருக்க முடியும். ஆனால் வாங்கு வங்கி அரசியலுக்காக இதனை செய்யவில்லை என ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.
இந்தநிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் டோல்கஞ்சில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
‘‘காங்கிரஸின் இந்த மனப்போக்கு தான் நாட்டை மிக மோசமாக காயப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் எந்த பிரச்சினைக்கும் காங்கிரஸ் தீர்வு கண்டதில்லை.
இந்த நாட்டில், சமூகத்தில் பல்வேறு சமூகங்களை பிரித்து அவர்களைச் சுற்றி சுவர் எழுப்பி இணைந்து விடாமல் தடுப்பதை காங்கிரஸ் தொடர்ச்சியாக செய்து வந்தது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பிரச்சினைக்கு தீ்ரவு கண்டிருக்க முடியும்.
ஆனால் வேண்டுமென்றே எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை. அயோத்தி பிரச்சினையையும் காங்கிரஸ் கட்சி நீண்ட காலத்துக்கு முன்பே தீர்த்திருக்க முடியும். ஆனால் வாங்கு வங்கி அரசியலுக்காக இதனை செய்யவில்லை’’ எனக் கூறினார்.