மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் குழப்பங்கள், ஆளுநரின் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக சார்பில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றதைக் கண்டித்தும், அங்கு நடக்கும் அரசியல் குழப்பங்கள் தொடர்பாகவும் மக்களவை இன்று தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள்.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடந்துள்ளது. கேள்வி நேரத்தில் எந்தக் கேள்வியும் இல்லை என்று காட்டமாகப் பேசினார்.
இதையடுத்து, அவையில் காங்கிரஸ்,என்சிபி, சிவசேனா எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஜனநாயகத்தைக் காப்போம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்யாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மக்களவையை நடத்த முடியாத அளவுக்கு எம்.பி.க்கள் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
நண்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் அவை கூடியது. அப்போதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தமுடியாமல் மகாராஷ்டிர விவகாரத்தை எழுப்பினர். இதனால் அவையைப் பிறபகல் 2 மணி வரை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
பின்னர் 2 மணிக்கு மேல் மக்களவை கூடியது. அப்போது உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, எஸ்பிஜி திருத்த மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார். இந்தத் திருத்த மசோதாவில் பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும், குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படாது என்ற வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிமுகம் செய்தபின், காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டு, மகாராஷ்டிரா விவகாரம் குறித்துப் பேச ஒத்திவைப்புத் தீர்மானம் கோரினார்கள். இதனால், அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அவையை இன்று முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்