பள்ளி சீருடைகளுக்காக நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து துணி வாங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிக்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இதை அவர் தெரிவித்தார்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ‘சிறுவந்தாடு பட்டு நெசவு மையத்தை புனரமைப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் எதுவும் உள்ளதா? சிறுவந்தாடு பட்டு நெசவாளர்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கு மத்திய அரசு உதவுமா?
பள்ளிகளின் சீருடைகளுக்கான துணியை நேரடியாக கைத்தறி நெசவாளர்களிடம் வாங்குவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிப் பொருட்களை நேரடியாக அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்படுமா?’ எனக் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
''இந்தியா முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுத் தொழில்நுட்பப் பயிற்சி எச்எஸ்எஸ் என்ற திட்டத்தின் மூலமும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சிகளை என் எச்டிபி, சிஎச்சிடிஎஸ் திட்டங்களின் மூலமாகவும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
புவிசார் குறியீடு பெறுவதற்கு நெசவாளர்களுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. இதுவரை 65 பொருட்களுக்கு அவ்வாறு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சீருடை களுக்காக நேரடியாக நெசவாளர்களிடமிருந்து துணியை வாங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. ஆனால் சில மாநில அரசுகள் அதைச் செயல்படுத்தி வருகின்றன;
அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட 23 ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக ஏற்கெனவே நெசவாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது''.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.