மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் குற்றம் சாட்டினார்.
மக்களவை இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தைத் தொடங்குவதாகவும், கேள்விகள் கேட்கலாம் என்றும் அறிவித்தார்.
அப்போது அவையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "கேள்வி நேரத்தில் எந்தவிதமான கேள்வியும் கேட்கப் போவதில்லை. மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடத்தப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி பேசித் தொடங்குவதற்கு முன்பிருந்தே மக்களவையில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா எம்.பி.க்கள் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அவை தொடங்கியதில் இருந்தே எம்.பி.க்களின் முழக்கத்தால் அவையில் கடும் அமளி நிலவியது.
காங்கிரஸ், சிவேசேனா, என்சிபி எம்.பி.க்கள் பலர் கையில் பதாகைகளுடன் உள்ளே வந்து அவையில் மத்திய அரசுக்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், பதாகைகளைக் கீழே போடும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹிபி எடன், பிரதாபன் ஆகியோர் பதாகைகளை தூக்கிப் பிடித்தவாறே கடுமையாக கோஷமிட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் ஹிபி எடன், பிரதாபன் இருவரையும் அவையில் இருந்து வெளியே அனுப்ப அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அவையில் தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவையை நண்பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்
முன்னதாக, அவை தொடங்கும் முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், என்சிபி கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினார்கள்.
மகாராஷ்டிராவில் என்சிபியைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்திருப்பதைக் கண்டித்தும், பாஜகவின் செயல்களைக் கண்டித்தும் காங்கிரஸ், என்சிபி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆனந்த் சர்மா, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சோனியா காந்தி ஆகியோர் பேனர்களையும், பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் கோஷமிட்டனர். மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடந்துள்ளது என்று அவர்கள் கோஷமிட்டனர்.