மகாராஷ்டிர அரசியல் குழப்பம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், துணை முதல்வர் அஜித் பவாரை சந்தித்து ஆலோசித்து வருகிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாகன் பூஜ்பால்.
மகாராஷ்டிராவில் பாஜக இரவோடு இரவாக ஆட்சியமைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், இன்று காலை (திங்கள்கிழமை) மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இல்லத்திறகுச் சென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாகன் பூஜ்பால் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக அஜித் பவாரை கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக சரத் பவார் அறிவித்திருந்தார். ஆனால், அஜித் பவாரோ தான் இன்னமும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பதாகவும் சரத் பவாரே தனது தலைவர் என்றும் கூறினார்.
இரவோடு இரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி பாஜக ஆட்சியமைத்ததாக ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அஜித் பவாரோ தான் இன்னமும் என்.சி.பி.யில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் தனித்தனியாக வெவ்வேறு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைக்குள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இத்தகைய நிலையில் சாகன் பூஜ்பால் - அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாகன் பூஜ்பாலும் அஜித் பவாரின் ஆதரவாளர் என்பதால் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. முன்னதாக நேற்று காலை சாகன் பூஜ்பால் சரத் பவாரைச் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.