இந்தியா

பக்தர்களிடம் ரூ.15 லட்சம் வரை நித்யானந்தா நன்கொடை வசூல்: மகள்களை மீட்க போராடும் தந்தை ஜனார்தன சர்மா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கர்நாடகாவை சேர்ந்தவர் ஜனார்தன சர்மா. இவரது 2 மகள்கள் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க ஜனார்தன சர்மா போராடி வருகிறார். இதுதொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:

எல்இடி விளக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தேன். எல்இடி விளக்குகளை விற்பது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், ஆசிரமத்தின் குருகுல கல்வி நடைமுறை குறித்த கலந்துரையாடலுக்கு அழைத்தனர். நானும் பங்கேற்றேன். உபநிடதம் அடிப்படையிலான கல்வி, யோகா, நவீன கல்வி நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரம பள்ளியில் எனது 4 பிள்ளைகளையும் சேர்த்தேன்.

எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆசிரமத்தில் இணையுமாறு நித்யானந்தா அழைப்பு விடுத்தார். அதே ஏற்று வேலையை உதறிவிட்டு அவரோடு இணைந்தேன். என்னை அவரது செயலாளராக நியமித்தார். பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை சந்தித்து நித்யானந்தாவின் சீடர்களாக மாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் நன்கொடை வசூலிக்க வற்புறுத்தப்பட்டேன். குஜராத்தில் பிரபலங்களை சந்தித்து நன்கொடை வசூலிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத்தில் மட்டும் 300 முதல் 400 ஏக்கர் நிலத்தை நன்கொடையாகப் பெற்றோம். ஒரு கோயிலையும் குறிவைத்தோம். மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் நித்யானந்தா பெருமளவில் நிதி திரட்டுகிறார். இந்த வகையில் ஆசிரம ஊழியர்கள் நாளொன்றுக்கு ரூ.8 கோடி வரை நிதி திரட்டவும் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். நிதி திரட்டி கொடுப்போருக்கு 10 சதவீத கமிஷன் வழங்கப்படுகிறது.

நித்யானந்தாவின் பாலியல் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என்று முதலில் நம்பினேன். ஆனால் அது தவறு என்பதை புரிந்து கொண்டேன். கடந்த 2018-ம் ஆண்டில் பெங்களூரு ஆசிரமத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பக்தரிடமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் முன்னிலையில் குழந்தைகள், ‘சக்தி அனுபவம்' நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பங்கேற்ற மாணவர்கள் சில தவறுகளை செய்தனர். ஆத்திரமடைந்த நித்யானந்தா, பள்ளி முதல்வரை அழைத்து கண்டித்தார். உடனடியாக கதவுகள் மூடப்பட்டன. ஒவ்வொரு மாணவரும் செருப்பால் பரஸ்பரம் அடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆசிரம வளாகத்தில் தங்கியிருந்த ஒரு பெற்றோர், இந்த கொடுமையை பார்த்து நித்யானந்தாவிடம் புகார் செய்தனர்.

இதேபோல வெளிநாட்டு பெண் சீடர் ஒருவரும், ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக புகார் செய்தார். ஆசிரமம் தரப்பில் இருவருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பிறகே ஆசிரம நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் புலனாய்வு விசாரணையில் இறங்கினேன். அப்போது ஆசிரமத்தில் பல்வேறு கொடுமைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்ப முடிவு செய்தேன்.

எனது 4 பிள்ளைகளில் 12 வயது மகனையும் 15 வயது மகளையும் மீட்டுவிட்டேன். ஆனால் மூத்த மகள்கள் தாட்வபிரியா (21), நந்திதா (18) ஆகியோர் நித்யானந்தாவின் பிடியில் உள்ளனர். அவர்களை மீட்க போராடி வருகிறேன். இதுதொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில், “நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. எனது பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல் துறை என் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை மடை மாற்றவே என்னை குறிவைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT