அச்சுறுத்தும் சுவரொட்டிகளால் நான்கு நாட்கள் கடையடைப்பட்டிருந்த காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மீண்டும்இயல்பு நிலை திரும்பியதால் தற்போது ஸ்ரீநகர் வார சந்தை களைகட்டத் தொடங்கியது. கடைகளுக்கு பொருள்கள் வாங்க மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைகள் திறக்கப்பட்டன, மக்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகள் வலம் வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது:
''அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கட்டு மூன்று மாதங்களைக் கடந்தபிறகும் மக்களிடையே இயல்பான ஒற்றுமை நிலவியதால் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் ஏதுமில்லை.
ஆனால் திடீரென நகரத்தின் சில இடங்களிலும் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும், கடைக்காரர்கள் மற்றும் பொது போக்குவரத்து நிர்வாகங்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள் காணப்பட்டன.
கடந்த நான்கு நாட்களாக கடையடைப்பில் ஈடுபடவேண்டும் என காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் அச்சுறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வேலைநிறுத்தம் கடையடைப்பு போன்றவைகளால் மக்கள் வெளியே வர தயங்கினர்.
மக்களை அச்சுறுத்தும் சுவரொட்டி எச்சரிக்கைமீது காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய பல நபர்களை கைது செய்ததன்மூலம் அவர்களது நோக்கங்கள் முறியடிக்கப்பட்டன.
நான்கு நாட்களுக்குப் பிறகு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஸ்ரீநகரில் மக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். லால் சவுக்கின் வணிக மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகள் வலம் வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும் இங்குள்ள நகரத்தின் பழைய நகர பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் நகரத்தில் மூடப்பட்டுள்ளன.''
இவ்வாறு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்தனர்.