புதுடெல்லி
பிஹாரில் 2015-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம்- லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. கூட்டணி ஆட்சியின் முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார்.
அப்போது 2017-ம் ஆண்டில் திடீரென இரவோடு இரவாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை கூட்டணியிலிருந்து, முதல்வர் நிதிஷ் குமார் கழற்றிவிட்டார். இதைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ஏற்றார். ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிதான் நீடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இரவோடு இரவாக ஒரு கட்சியை கழற்றி விட்டுவிட்டு மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைத் தக்கவைக்கும் காட்சி மாற்ற நிகழ்வு அப்போதே துவங்கிவிட்டது.
இதுபோலவே மகாராஷ்டிராவிலும் கூட்டணிக் கட்சிகளின் காட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வரை காங்கிரஸ், என்சிபி, சிவசேனா ஆகிய 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இரவோடு இரவாக, என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரை, பாஜக தங்களது கூட்டணிக்கு அழைத்து வந்து ஆட்சியில் அதிரடியாக அமர்ந்துள்ளது. சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக-என்சிபி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது அரசியல் விமர்சகர்களின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.