காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) சேர உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ள இன்று ஏராளமான பெண்கள் ஜம்மு ஆட்சேர்ப்பு தேர்வு மையத்திற்கு வந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பின்னர் முதல் ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது. காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இருவேறு இடங்களிலும் ராணுவ ஆட்சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர, விண்ணப்பதாரர்கள் உடல் சகிப்புத்தன்மை சோதனை மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை நவம்பர் 16 முதல் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 1356 பணியிடங்களுக்கு 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தனர். இந்தமுறை துணை ராணுவப் படையில் சேர்வதற்கு 172 பெண் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ராணுவத்தில் உயரதிகாரிகளாகவும் பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பாலினத் தடைகளை மீறி ராணுவத்தில் சேரும் அவர்களது ஆர்வம் இம்முறை அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வலர்கள் வரிசையில் நின்றனர். இதில் 1727 பெண்கள் கலந்துகொண்டு பதிவு செய்துகொண்டனர்.
இதுகுறித்து உடல்தகுதி தேர்வில் பங்கேற்க வந்திருந்த பெண் விண்ணப்பதாரர் ஒருவர் இன்று கூறுகையில், ''பி.எஸ்.எஃப் இல் சேர வேண்டும் என்பது எனது குழந்தைப் பருவ கனவு. எனது முடிவை எனது குடும்ப உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்றார்.
இன்னொரு விண்ணப்பதாரர் லவ்லி கூறியதாவது:
''எனது கல்லூரி காலத்தில் நான் என்சிசி அணியில் பயிற்சிகள் மேற்கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளேன். எனினும் ஆட்சேர்ப்பு செயல்முறையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
தேசத்திற்கு சேவை செய்வது எனது கனவு. உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றது திருப்தியாக உள்ளது. எனது ஓட்டப்பந்தய தேர்வை நான் முடித்து விட்டேன், தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.'' என்றார்.