சுற்றுலா விசாவில் இந்தியா வந்த சீனப் பயணிகள் நான்கு பேர் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததை பாதுகாப்பு ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
சுற்றுலா விசாவில் வந்த சீனப் பயணிகள் சிலர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கு வந்தனர். அவர்கள் முக்கிய இடங்கள் எதையும் சுற்றிப் பார்க்கச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து இமாச்சலப் பிரதேசத்தின் பாடி நகர காவல் கண்காணிப்பாளர் ரோஹித் மல்பானி கூறியதாவது:
''இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் சீனப் பயணிகள் 4 பேர் பாடி நகரின் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். நாட்டை விட்டுச் செல்லும் முன் அவர்கள் எந்த இடத்தையும் சுற்றிப் பார்க்கவில்லை. மாறாக ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் பாடி மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னணி மின் தொழிற்சாலைக்குச் சென்று பணியாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினர். இது உளவுத்துறையினரின் பாதுகாப்புப் பிரிவின் ரேடாரில் பதிவாகியுள்ளது.
உளவுத்துறையினர் அளித்த தகவல்களின்படி 4 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீன நாட்டினர் எந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள். அவர்கள் சுற்றுலா விசாவின் விதிமுறைகளை மீறினார்களா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் இந்தியா வந்து பணியாற்றிச் சென்றதற்கான காரணங்கள் பற்றி இப்போதைக்கு எதையும் கூறமுடியாது. வேறந்த கோணத்திலும் அவர்கள் வருகை குறித்து ஆராயப்படவில்லை. விசாரணைக்குப் பிறகு அனைத்து உண்மைகளும் தெரியவரும்''.
இவ்வாறு இமாச்சலப் பிரதேசத்தின் பாடி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.