சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தகாட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார்; திரும்பி வருவார்: சஞ்சய் ராவத் நம்பிக்கை

பிடிஐ

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மிரட்டப்பட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலால், கூட்டணி பிரிந்தது. இதனால், எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனால் காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியது. 3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு. என்சிபி ஆதரவு அளிக்கவில்லை. அஜித் பவார் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்தார்.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், " மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக இழுக்க நினைத்தால் மகாராஷ்டிராவில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது" என்று எச்சரித்தார்.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "என்சிபி தலைவர் அஜித் பவார் மிரட்டப்பட்டு, பாஜக பக்கம் இணைந்து ஆட்சி அமைக்க உதவியுள்ளார். மீண்டும் தேசியவாத கட்சிக்கு அஜித் பவார் திரும்புவார் என நம்புகிறேன்.

அஜித் பவார் பக்கம் 8 எம்எல்ஏக்கள் சென்றனர். அதில் 5 பேர் திரும்பிவிட்டார்கள். 8 எம்எல்ஏக்களையும் பொய் சொல்லி அழைத்துச் சென்று கடத்தியுள்ளார்கள்.

என்சிபி எம்எல்ஏ தனஞ்சே முண்டேவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அஜித் பவார் மிரட்டி, பாஜக பக்கம் இழுக்கப்பட்டுள்ளார். அந்த உண்மைகளை விரைவில் நாங்கள் சாம்னாவில் வெளியிடுவோம். விரைவில் அஜித் பவார் திரும்புவார்.

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் உருவான அரசு காலை 7 மணிக்குப் பதவி ஏற்றுள்ளது. இருளில்தான் பாவங்கள் செய்யப்படும்" என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT