இந்தியா

வளைகுடா நாடுகளில் 34,000 இந்தியர்கள் இறப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 33,988 இந்தியர்கள் இறந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தின்போது வளைகுடா வாழ் இந்தியர்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவருமான உத்தம் குமார் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் 2014-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் 33,988 இந்தியர்கள் இறந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் 4,823 இந்தியர்கள் இறந்துள்ளனர். சராசரியாக தினமும் 15 இந்தியர்கள் இறக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

இதனிடையே, ஹைதராபாத்தில் பேட்டியளித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் தெலங்கானா பிரிவைச் சேர்ந்த அதிகாரி சிட்டி பாபு கூறுகையில், ‘‘வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் இறந்துள்ள இந்தியர்களில் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,200 பேர் இறந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT