திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குவதை யொட்டி, தாயார் கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா இன்று துவக்கம்

செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

திருப்பதி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பாக செய்துள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது. இதனால், வழக்கத்தை விட இம்முறை இரவு நேர வாகன சேவை பக்தர்களின் வசதிக்காக அரை மணி நேரம் முன்னதாக தொடங்க உள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சிகள்தாயாரின் பிரம்மோற்சவ விழாவை யொட்டி, நேற்று அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின்படி நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணியிலிருந்து 8.50 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ம் தேதி காலை பெரிய சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும், 25-ம் தேதி காலை முத்து பல்லக்கு, இரவு சிம்ம வாகனம், 26-ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு ஹனுமன் வாகனம், 27-ம் தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகனம், 28-ம் தேதி காலை சர்வ பூபால வாகனம், மாலை தங்க ரத உற்சவம், இரவு கருட வாகனம், 29-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை, 30-ம் தேதி காலை தேர்த்திருவிழா, இரவு குதிரை வாகன சேவைகள் நடைபெற உள்ளன. நிறைவு நாளான டிசம்பர் மாதம் 1-ம் தேதி காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் தாயாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் அன்றிரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு, குடிநீர், அன்னதானம், போக்குவரத்து வசதி, வாகன பார்க்கிங் வசதி, லட்டு பிரசாதம் விநியோகம், மாட வீதிகளில் அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்துள்ளனர். விழாக்கோலம்பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருச்சானூரிலிருந்து திருப்பதி வரை அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

SCROLL FOR NEXT