கமல்ஹாசன் | கோப்புப் படம் 
இந்தியா

கோட்சே பற்றி கமல் சர்ச்சைப் பேச்சு : வழக்கு விசாரணை டிச.9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் கோட்சே பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மே மாதத் தொடக்கத்தில் கலந்துகொண்ட கூட்டமொன்றில் பேசும்போது, ''பல முஸ்லிம்கள் இங்கு இருப்பதால் நான் இதைச் சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே'' என்று கூறியதாக அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது.

கமல்ஹாசன் பேசிய கருத்துகள் மதங்களுக்கிடையில் பகைமையை ஊக்குவிக்கிறது. தனது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை இன்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரணையை வரும் டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறியுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் அடுத்த விசாரணையின்போது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிபதி சம்மீத் ஆனந்த் இந்த புகார் மனு மீதான அறிக்கையைப் பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT