காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக அமலில் இருப்பதாக கூறுவது தவறு என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள், “உங்கள் பதில் மனு விரிவாக இல்லை. இதைக்கொண்டு எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. இந்த வழக்கில் நீங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். மனுதாரர்கள் எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாக பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இதற்கு துஷார் மேத்தா பதில் அளிக்கும்போது, “காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக மனுதாரர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தவறானவை. அங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக அமலில் இருப்பதாக கூறுவது தவறு.
தகவல் உரிமைச் சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமலுக்கு வந்துள்ளன. நன்கு ஆராய்ந்த பிறகே அதிகாரிகள் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். அங்கு தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. போஸ்ட் பெய்டு மொபைல் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மீண்டும் அளிக்கப்படுகின்றன” என்றார்.