இந்தியா

நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், நாட்டையே விற்றுவிடுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மக்களவை இன்று காலை கூடியதும், இந்த விவகாரம் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி எழுப்பி அமளியில் ஈடுபட்டது.

இந்தநிலையில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. நஷ்டத்தில் செயல்படும் நிறுவனங்களை மட்டுமே விற்பனை செய்வோம், லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்க மாட்டோம் என கூறினார்கள்.

ஆனால் இப்போது அதை தான் செய்கிறார்கள். அவர்கள சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் விற்று விடுவார்கள். இது தான் அவர்கள் நிலையா என விளக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT