கொல்கத்தா தெருவொன்றில் நேற்று அலுவலக வளாகத்தின் மாடியிலிருந்து பண மழை பெய்ததால் அவ்வழியே சென்றவர்கள் மற்றும் அப்பகுதி வாழ் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கொல்கத்தாவில் அமைந்துள்ளது பென்டிங் வீதி. இங்குள்ள அலுவலக வளாகக் கட்டிடத்தின் மாடிகளில் ஒரு தளத்திலிருந்து ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.100 ஆகிய வெவ்வேறு பணத்தாள்களும் பணக்கட்டுகளும் வீசி எறியப்பட்டன. வீதிகளில் விழுந்த பணத்தை அவ்வழியே சென்றவர்களும் அப்பகுதி மக்களும் ஓடிவந்து சேகரித்ததாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
மக்கள் உற்சாகத்துடன் தெருவில் விழுந்த பணத்தைச் சேகரிக்க முட்டி மோதியது மொபைல் கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ''முதலில் சில தனித்தனியான பணத்தாள்கள் விழுந்தன. ஆனால், பின்னர் ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.100 என்று பணக்கட்டுகளாக விழத் தொடங்கின. யாரோ அவற்றை வீசுகிறார்கள் என்றுதான் நாங்கள் அனைவரும் அதைப் பார்க்கக் கூடினோம், ஆனால் அது ஏன் செய்யப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.
நேற்று பின்னிரவில் வெளியான தகவல்களின்படி இங்குள்ள அலுவலக வளாகக் கட்டிடங்களில் அமைந்துள்ள பல்வேறு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாடியிலிருந்து பணத்தாள்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வருவாய் புலனாய்வு இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், ''கட்டிடத்தில் இருந்த அலுவலகம் ஒன்றில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) திடீர் சோதனையில் ஈடுபட்டது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகளே தெருவில் வீசப்பட்டன. நேற்றிரவு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இந்த திடீர் தேடுதல் வேட்டை சில ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தொடர்பான வணிகப் புலனாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது ஆவணங்களுக்கான தேடல் நடவடிக்கையாகும். இது கணினிகளில் சேமிக்கப்பட்ட சில தகவல்களாக இருக்கலாம். ஆனால் இந்நிலையில் எங்களால் மேலும் எதுவும் சொல்ல முடியாது. சோதனை நடைபெறும் அலுவலகத்தின் பெயரையும் இந்த நேரத்தில் நாங்கள் வெளியிட முடியாது'' என்று தெரிவித்தார்.
பணக்கட்டுகளும் பணத்தாள்களும் ஏன் தெருவில் வீசப்பட்டன என்ற கேள்விக்குப் பதில் அளித்த மூத்த அதிகாரி, ''அதைப் பற்றியும் விவரமாக எதுவும் நாங்கள் சொல்ல முடியாது. இது எங்கள் தேடல் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதும் எங்களுக்குத் தெரியாது'' என்றார்.
கட்டிடத்தில் பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எவராலும் சோதனை நடந்த அலுவலகத்தின் பெயரை உறுதிப்படுத்த முடியவில்லை.