மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி : படம் உதவி ஏஎன்ஐ 
இந்தியா

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையில் மிகப்பெரிய ஊழல்: மக்களவையில் காங்கிரஸ் கடும் அமளி

பிடிஐ

பொதுத்துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கன்கார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகப்பெரிய ஊழல் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நிதிப்பத்திரங்களை தற்போது யார் வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிக்கு அளிக்கலாம். அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்ற மாற்றியுள்ளது.

மக்களவை இன்று காலை கூடியதும், இந்த விவகாரம் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி எழுப்பி அமளியில் ஈடுபட்டது. மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தலைமையில் 15 எம்.பி.க்கள் சபாநாயகரின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

அவர்களை அமைதியாக இருக்கையில் அமரும்படியும், கோஷமிடுவது நாகரிகமல்ல என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனால், ஏறக்குறைய 15 நிமிடங்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகரைப் பார்த்து, "பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது மிகப்பெரிய ஊழல். இந்த நாடு கொள்ளையடிக்கப்படுகிறது. எங்களுக்குப் பேசுவதற்கு அனுமதி வழங்குங்கள்" என்று முழக்கமிட்டார்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, "எம்.பி.க்கள் அனைவரும் தரம் தாழ்ந்து நடக்கக்கூடாது. அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடுவது சரியல்ல. இது தவறான செயல். விளையாட்டு வீரர்கள் குறித்து இந்த அவையில் முக்கியமான விவாதம் நடந்து வருகிறது. அவையின் மையப்பகுதிக்கு வராதீர்கள். ஒவ்வொரு எம்.பி.க்கும் அவையின் கண்ணியம் காப்பதில் பொறுப்பு இருக்கிறது. கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. அதில் தொந்தரவு செய்ய வேண்டாம்.

நான் புதிய சபாநாயகர். நீங்கள் அனைவரும் மூத்த உறுப்பினர்கள். மையப்பகுதிக்கு வந்து கோஷமிடாதீர்கள். காங்கிரஸ் அளித்த கோரிக்கையான ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க முடியாது. ஆனால், பேசுவதற்கு அனுமதி அளிக்கிறேன்" என உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

அதன்பின் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்தனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், "எதிர்க்கட்சியினர் அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதேபோல சபாநாயகரும் செயல்பட வேண்டும். நீங்கள் புதியவர் அல்ல. நீங்கள் சபாநாயகர். முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கத்தான், ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தோம், அவைத் தலைவரை அவமதிக்கவில்லை. நாங்கள் முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளோம். இது மிகப்பெரிய ஊழல். நாடு கொள்ளையடிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி எழுந்து பேசுகையில், "பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறார். இங்கு ஊழல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. நாள்தோறும் சில விஷயங்களைக் கொண்டுவந்து ஒத்திவைப்பு தீர்மானம் கேட்கிறீர்கள். இது இங்கே நடக்காது" என்றார்.

அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில் அளிக்கையில், "நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிலக்கரி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து நாள்தோறும் ஒத்திவைப்புத் தீர்மானம் கோரினீர்கள், அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்தீர்கள்" எனத் தெரிவித்தார்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு சமாதானம் செய்தவுடன் எம்.பி.க்கள் அமைதி காத்தனர்.

SCROLL FOR NEXT