தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு, அந்த நிறுவனங்கள் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இதனால் உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமி தரப்பு கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தவிர, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தோதோஹா கெமிக்கல்ஸ், லெக்ஸ் ப்ராப் பர்டீஸ், மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம், ஆஞ்சநேயா பிரின்ட்டர்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கு எதிராகவும் கர்நாடகா மற்றும் திமுக மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதா தரப்புக்கும், அந்த நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை ஜெயலலிதா தரப்பு 46 பக்கம் அளவுள்ள பதில் மனுவை தாக்கல் செய்தது.
இந்நிலையில் நேற்று, அந்த 6 நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. சுமார் 50 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவில், "6 நிறுவனங்களுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நிறுவனங்களின் சொத்துகள் ஜெயலலிதாவின் பினாமி சொத்துகள் அல்ல.
எனவே நாங்கள் இவ்வழக்கில் இருந்து, ஆதாரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறோம். அதனால் எங்களை மீண்டும் இந்த வழக்கில் சேர்க்க கோருவதை ஏற்கக் கூடாது. இதே போல தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நால்வரின் விடுதலைக்கு எதிரான மனுக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான மனுக்களுக்கும் ஜெயலலிதா தரப்பு உரிய காலத்துக்கு முன்பே பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.
இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விரைவில் தொடங்கும் என்றும், அப்போது ஜெயலலிதா தரப்பின் மனுக்களுக்கு எதிர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்படும் எனவும் கூறப்படுகிறது.