கோப்புப் படம் 
இந்தியா

காஷ்மீரில் கட்டுப்பாடுகள்; ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

செய்திப்பிரிவு

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள விவகாரத்தில் கேள்வி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் வேண்டும் என அம்மாநில நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதற்கு காஷ்மீர் நிர்வாகம் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''காஷ்மீர் நிர்வாகம் தினசரி அடிப்படையில் கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்து வருகிறது. பெரும்பாலான பகுதியில், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை'' என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில் ‘‘காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் எந்தெந்த வகையில் பாதிப்புள்ளது என விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் விரிவான தகவல்கள் இல்லை.

அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றொன்றுக்கும் தனித்தனியாக பதில் வேண்டும். பொதுவாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன, இயல்புநிலை திரும்புகிறது என்று மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல.’’ எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து விரிவான மனுவை தாக்கல் செய்வதாகவும், தற்போதைய மனு தம்மிடமே இருக்கும் எனவும் துஷார் மேத்தா கூறினார்.

SCROLL FOR NEXT