இந்தியா

உ.பி.யில் வைக்கோலை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக 20 விவசாயிகளுக்கு சிறை 

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் பிலிபித்தில் அறுவைக்குப் பின் வைக்கோலை எரித்து மாசுபடுத்தியதாக 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முற்படவில்லை எனக் கூறி சுமார் பத்து மாவட்ட அதிகாரிகளும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அறுவடைக்கு பின் வைக்கோலை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வட மாநிலங்களில் அதிகமாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரான டெல்லி மாசுபடுவதில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கிறது.

இதற்கு அதை சுற்றியுள்ள மாநிலங்களான ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் காரணம் எனப் புகார் உள்ளது. இந்த பிரச்சனை உபியிலும் உருவாதை தடுக்க அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நேபால் நாட்டின் எல்லையில் உள்ள உ.பி.யின் பிலிபித்தில் 20 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கை அம்மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவாத்ஸவா உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், பிலிபித்தின் காவல்நிலையப் பகுதிகளான புரான்பூரில் 15, மதோதாண்டாவில் 5 விவசாயிகளும் சிக்கியுள்ளனர். தன் மீதான இப்புகாரை கைதான விவசாயிகள் மறுத்துள்ளனர்.

பிலிபித் மாவட்ட அதிகாரிகள் தம் தவறுகளை மறைக்க வேண்டி தங்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள்னர். இப்பிரச்சனையில், பிலிபித் ஆட்சியர் வைபவ் தம் 17 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

இதுபோல், வைக்கோலை எரித்ததாக பிலிபித்தின் 850 விவசாயிகள் மீது ஏற்கெனவே வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்களில் பலர் மீது அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வைக்கோலை எரித்ததாக விவசாயிகள் மீதான நடவடிக்கைகள் உ.பி.யின் வேறு பல மாவட்டங்களிலும் தொடர்கிறது. இதற்காக பல விவசாயிகளுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டு வசூலிப்பதும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT