இந்தியா

நாடுமுழுவதும் என்ஆர்சி; மதத்தின் பெயரால் சமூகத்தை  பிளவுபடுத்தும்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடுமுழுவதும் அமல்படுத்துவது மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் செயல் என காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும். அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும்.

தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான்’’ எனக் கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:

‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடுமுழுவதும் அமல்படுத்தும் மத்திய அரசின் திட்டம் மிகவும் ஆபத்தானது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் செயல். என்ஆர்சி தொடர்பான எந்த ஒரு முடிவெடுக்கும் முன்பாக அதனை நாடாளுமன்றத்தில உரிய முறையில் விவாதித்த பின்பே முடிவெடுக்க வேண்டும். அவசர கதியில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT