மத்தியஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் : கோப்புப்படம் 
இந்தியா

உயர் நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளாக தேங்கும் வழக்குகளுக்கு உடனடித் தீர்வு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

பிடிஐ

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கியிருக்கும் வழக்குகளை உடனடியாகத் தீர்க்குமாறு நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது:

''நாடு முழுவதும் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நீதி பரிபாலனமும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நீதிமன்றங்களின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஏற்கெனவே 50 சதவீத நிதியை வழங்கியுள்ளது. தேசிய நீதிமன்ற பதிவேடும் தயாராகியுள்ளது. உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை 478 நீதிபதிகள் நிரப்பப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சிவில், மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அவற்றை உடனடியாக முடித்து வைக்க நீதிமன்றங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிக்கு விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் சிவில், கிரிமினல் வழக்குகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள் என்பதுதான்.

25 உயர் நீதிமன்றங்களில் 43 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 8 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அனைத்து இந்திய நீதி சேவை தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கோரப்படுகிறது.

விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு, கீழ்நிலை நீதிமன்றங்களில் இருந்து பிரதிநிதித்துவத்தை வழங்குவதை அனைத்து இந்திய நீதி சேவை உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT