பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம் 
இந்தியா

எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம் செல்லுங்கள்: காங்கிரஸுக்கு சுப்பிரமணிய சுவாமி பதில்

ஐஏஎன்எஸ்

சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடரலாம் என்று பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 8-ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கக் கோரி மக்களவையில் நேற்று காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். இன்று இதே கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மாவும் மாநிலங்களவையில் எழுப்பிப் பேசினார்.

ஆனந்த் சர்மா பேச்சுக்குப் பதில் அளித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், " சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு ஆய்வு செய்யாமல் திரும்பப் பெறவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக் குழு கூடி இந்த விஷயத்தைப் பலமுறை ஆலோசித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை எதிர்ப்பவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடரலாம்.

காங்கிரஸ் ஆட்சியின்போதும் இதேபோன்று அரசியல் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பதைக் கூறிக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின், சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இல்லை. அதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின் அந்த அச்சுறுத்தல் குறைந்து, தற்போது அச்சுறுத்தல் இல்லை. உச்ச நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தூக்கிலிடக்கூடாது என்று சோனியா காந்தி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்" எனத் தெரிவித்தார்.

உடனடியாக மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, " தொடர்பில்லாத விஷயங்களை அவையில் பேசுவதைத் தவிர்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT