காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா மாநிலங்களவையில் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

சோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

பிடிஐ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு திரும்பப் பெறப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 8-ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கக் கோரி மக்களவையில் நேற்று காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனால், மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சோனியா குடும்பத்தாருக்கும், மன்மோகன் சிங்கிற்கும் எஸ்பிஜி பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று தொடங்கியதும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா எழுந்து பேசுகையில், "சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய அரசு எஸ்பிஜி பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட அந்தப் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்.

சோனியா குடும்பத்தாருக்குத் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய 4 பேரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. பிரிவினைவாத அரசியலைத் தாண்டி, எஸ்பிஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தேசிய நலன் கருதி இதை மத்திய அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசின் நோக்கம் இன்றும் நாளையும் கேள்விக்குள்ளாகும்" எனத் தெரிவித்தார்.

அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ''விதி எண் 267-ன் கீழ் நோட்டீஸ் அளித்துவிட்டுப் பேசுங்கள்'' என்றார்.

அதற்கு ஆனந்த் சர்மா பேசுகையில், " ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். இவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அவசியமானது, அரசின் கடமை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் பாதுகாப்பை திரும்பப் பெறுவது குறித்து காங்கிரஸ் பேசியதில்லை" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT