கேரள மாணவர்கள், டெல்லியின் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தன.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய அன்றே டெல்லியின் ஜேஎன்யூ மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அவர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர்கள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கேரளப் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் மோசடி குறித்து விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இதைத் தடுக்க காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்ததில் கேரள மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் காயமடைந்தனர்.
இதேபோல சில ஜே.என்.யூ மாணவர்கள் முழுமையான கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின்போது டெல்லி காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தனர். இருப்பினும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட தடியடிப் பிரயோகக் குற்றச்சாட்டுகளை போலீஸார் மறுத்தனர்.
ஜே.என்.யூ.வின் பார்வைக் குறைபாடுள்ள மாணவர் மன்றம் இன்று டெல்லி காவல் தலைமையகத்தின் முன் மாணவர்கள் மீது காவல்துறையினரால் தடியடிப் பிரயோகம் செய்ததாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் தொடங்கியபோது கேரள மாணவர்கள், டெல்லியின் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் மக்களவையில் எழுப்பப்பட்டன. இதனை அடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர்.
நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒரு அசாதாரண நடைமுறையாகும், இது ஒப்புக் கொள்ளப்பட்டால், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் திட்டவட்டமான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான சபையின் இயல்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்படும். இத்தீர்மானத்தின் மீது உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.