சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற தந்தையுடன் இருமுடி கட்டிச் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் அந்தச் சிறுமி பம்பை பகுதியில் தங்க வைக்கப்பட்டார்.
மண்டலப் பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறந்தது முதல் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு அதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு விதித்த தீர்ப்புக்குத் தடை ஏதும் விதிக்கவில்லை.
இதனால் இந்த ஆண்டும் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விளம்பர நோக்கில் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள் என்று தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.
இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவைப் பற்றி இதுவரை 300க்கும் மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீஸார், சபரிமலைக்கு வரும் பெண்களின் அடையாள அட்டையைப் பரிசோதித்து அதன்பின் மலை ஏற அனுமதிக்கின்றனர்.
இதில் நடை திறக்கப்பட்ட முதல் நாளில் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்களை போலீஸார் திருப்பி அனுப்பினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்களை நேற்று போலீஸார் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தை, உறவினர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்றார். இன்று காலை பம்பை சோதனைச் சாவடியில் அந்தச் சிறுமியை மறித்து வயது உள்ளிட்ட விவரங்களை போலீஸார் கேட்டனர். அதன்பின் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை சிறுமியின்தந்தையிடம் பெற்றஉ ஆய்வு செய்த போலீஸார் சிறுமிக்கு 12 வயதாகிவிட்டது என்பதை உறுதி செய்து அவரை மலை ஏற அனுமதிக்க முடியாது என்று கூறி மறுத்தனர்.
அந்தச் சிறுமியுடன் வந்திருந்த அவரின் தந்தை, உறவினர்களிடம் போலீஸார் கோயிலின் பாரம்பரிய பழக்கம், கடைபிடிக்கப்படும் முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி கோயிலுக்குள் சிறுமியை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால், அந்தச் சிறுமி பம்பையில் போலீஸாரின் பாதுகாப்பில் பம்பை அடிவாரத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார்
சபரிமலையின் பாரம்பரியத்தை வலியுறுத்தி, கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தனது கழுத்தில் அட்டை ஒன்றைத் தொங்கவிட்டிருந்தார். அதில் இனிமேல் நான் 50 வயது அடைந்த பின் சபரிமலைக்கு வருவேன். அதுவரை காத்திருப்பேன்" எனத் தெரிவித்திருந்தார்.
திருச்சூரைச் சேர்ந்த ஹிர்தியா கிருஷ்ணன் என்ற சிறுமி, ''இதுவரை 3 முறை சபரிமலைக்கு வந்துவிட்டேன். இனிமேல் 50 வயது அடைந்த பின் சபரிமலைக்கு வருவேன்'' எனத் தெரிவித்தார்.