மக்களவையில் இன்று சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இனிமேல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய பாஜக அரசு அரசியல் காழ்புணர்வுடன் இந்த நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது. காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி இந்த பிரச்சினையை கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்த அரசு அலட்சியமாக உள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்து இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
ஆனால் இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்பக் கூடாது என கண்டித்த சபாநாயகர் இதுதொடர்பாக தனியாக நோட்டீஸ் வழங்க கோரினார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வாலும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி நீடித்தது.