மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்த உள்ள குடியுரிமை திருத்த மசோதா சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று கூச்பெஹர் நகரில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூலம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, குடியுரிமை திருத்த மசோதா குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " இந்தியப் பொருளாதாரத்தைச் சீரமைத்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா போன்றவற்றைச் சீரமைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக அதை விற்பனை செய்யவே ஆர்வமாக இருக்கிறது.
குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம், அசாமில் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) போன்று இதுவும் மக்கள் மீதான தாக்குதல்தான்.
வங்காள மக்களையும், இந்துக்களையும் சட்டபூர்வ குடிமக்கள் பட்டியலிலிருந்து நீக்கி, அவர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பின் கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு, அகதிகளுக்குக் குடியுரிமை கிடைக்க வகை செய்தோம். ஆனால் அவர்கள் 6 ஆண்டுகள் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள குடியுரிமை திருத்த மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள்,ஜெயின்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மதத்தினர் ஆகியோர் ஆவணங்கள் இல்லாமல் வந்தால்கூட குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது. மதரீதியாக மக்களைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால், கடந்த முறை பாஜக அரசில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
அசாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சி சட்டத்தால், 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.