சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட முதல் நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்ததோடு வருவாயும் கோடிக்கணக்கில் வந்துள்ளது
சபரிமலையில்அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டு பக்தர்கள் வருகையும் எதிர்பார்த்த அளவுக்கு சபரிமலையில் இல்லை.
இந்நிலையில் சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. மேலும் விளம்பர நோக்கில் பெண்கள் வந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படாது என்று கேரள அரசும் திட்டவட்டமாக அறிவித்தது.
இதனால், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று முறைப்படி நடை திறக்கப்பட்ட முதல் நாளே பக்தர்கள் வருகை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்தது. கடந்த ஆண்டு முதல் நாளில் ரூ.1.28 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு முதல் நாளில் ரூ.3.28 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் சபரிமலைக்கு கடந்த இரு நாட்களில் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இரு நாட்களிலும் சேர்த்து இதுவரை 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் பக்தர்கள் 3 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் இந்த வருவாய் அப்பம், அரவணை பாயாசம், பிரசாதம் ஆகியவற்றின் மூலம் தேவஸ்தானத்துக்குக் கிடைத்துள்ளது. இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் வருவாய் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் புதிய தலைவர் என். வாசு கூறுகையில், " சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருவாய் 2017-ம் ஆண்டு சீசனில் முதல் நாளில் கிடைத்த வருவாயைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு அன்னதானம் வழங்கும் எண்ணிக்கையை 40 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளோம்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்பட்டுள்ளன. வசதிகளைப் பார்த்து பக்தர்கள் திருப்தியுடன் செல்கின்றனர். சபரிமலையில் பிளாஸ்டி ஒழிப்புக்காக தனியாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிஸ் இல்லா சபரிமலையை இந்த ஆண்டு உருவாக்க இருக்கிறோம் அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.