நாடாளுமன்றத்தில் மிகவும் கண்ணியமுடன் நடப்பவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் பாராட்டு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கலைக்கப்படாமல் தொடர்ச்சியாக செயல்படும் அவை மாநிலங்களவை ஆகும். மாநிலங்களவையில் தற்போது 250-வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. 250-வது அமர்வுக்காக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில் ‘‘இந்திய அரசியல் பரிணாம வளர்ச்சியில் மாநிலங்களவையின் பங்கு மகத்தானது. பல்வேறு துறை சார்ந்து நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மாநிலங்களவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
இந்த அவை நிரந்தரமானது. பன்முகத்தன்மை கொண்டது, மதிப்பு மிக்கது. கூட்டாச்சி என்பதே இந்தியாவின் ஆன்மா. இதன் பன்முகத்தன்மையே இந்த அவையின் பலமாகும்’’ எனக் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது
‘‘இரண்டு கட்சிகளை நாம் இங்கு பாராட்டியாக வேண்டும். ஒன்று தேசியவாத காங்கிரஸ், மற்றொன்று பிஜூ ஜனதாதளம். இவ்விரண்டு கட்சியின் எம்.பி.க்களுமே நாடாளுமன்றத்தில் மிகவும் கண்ணியமுடன் நடப்பவர்கள். அவையின் மையப்பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்த முற்பட மாட்டார்கள். அதேசமயம் தங்கள் எல்லைக்குள் இருந்து தங்கள் கோரிக்கையை கூர்மையுடன் வலியுறுத்துவார்கள். ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியினரிடம் பாடம் கற்க வேண்டும். எங்கள் கட்சியான பாஜகவும் கூட அவர்களிடம் பாடம் கற்க வேண்டும்’’ எனக் கூறினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் பாஜக-சிவசேனா இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் எந்தக் கட்சியும் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி களின் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க முயன்று வருகிறது. எனினும் சிவசேனாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக எந்த உறுதிமொழியையும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இதுவரை அளிக்கவில்லை. இந்த பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.