வேற்றுமையில் ஒற்றுமை காணும் அவையாக மாநிலங்களவை உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்றத்தில் கலைக்கப்படாமல் தொடர்ச்சியாக செயல்படும் அவை மாநிலங்களவை ஆகும். மாநிலங்களவையில் தற்போது 250-வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. 250-வது அமர்வுக்காக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
‘‘இந்திய அரசியல் பரிணாம வளர்ச்சியில் மாநிலங்களவையின் பங்கு மகத்தானது. பல்வேறு துறை சார்ந்து நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மாநிலங்களவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
இந்த அவை நிரந்தரமானது. பன்முகத்தன்மை கொண்டது, மதிப்பு மிக்கது. கூட்டாச்சி என்பதே இந்தியாவின் ஆன்மா. இதன் பன்முகத்தன்மையே இந்த அவையின் பலமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்த சபையில் காண முடியும். இந்த சபை பல்வேறு பெருமைகள் கொண்டது.கருத்து ஒற்றுமையுடன் முத்தலாக் தடை, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு பெருமையான மசோதாக்கள் நிறைவேற்றபட்டுள்ளன. பெண்கள் அதிகாரம், நீதியை நிலை நாட்டல் என இந்த அவை திடமான முடிவுகளை எடுத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கிய உருவாக்கிய பெருமை அவைக்கு உண்டு.
இந்த அவையின் முதல் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் உருவாக்கிய கொள்கைகள், திட்டங்களை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமைமுறை முழுமையடையச் செய்யும் என நம்புகிறேன்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இது இரண்டாவது அவை அல்ல, மேம்பட்ட அவை என புகழ்ந்துரைத்தார். அவர் கூறியது உண்மையானது. மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட பலரும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முன்மாதிரியாக விளங்கினர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.