நிதித்துறைஇணையமைச்சர் அனுராக் தாக்கூர் : கோப்புப்படம் 
இந்தியா

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்: மக்களவையில் அமைச்சர் பதில்

பிடிஐ

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி அடையவில்லை. உலகில் இன்னும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாகவே இந்தியா இருந்து வருகிறது என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. பகவந்த் மான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதாவது:

''நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக வங்கிகளை இணைத்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் அளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி அடையவில்லை. எங்கிருந்து இந்த தரவுகளைப் பெற்றீர்கள்? ஆதாரம் இருந்தால் இந்த அவையில் காண்பிக்கலாம். உலகில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்தாலும்கூட, இந்தியா தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற படியலில்தான் இருந்து வருகிறது.

2025-ம் ஆண்டில் இந்தியா ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

வங்கிகள் இணைக்கப்பட்டு வங்கித்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க ஸ்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரிஏய்ப்பு செய்தவர்களை வரி செலுத்த வைத்துள்ளது மத்திய அரசு. ஜிஎஸ்டி வரியை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை சராசரியாக 7.5 சதவீதம் வளர்ச்சி இருக்கிறது. இது ஜி20 நாடுகளிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் அதிகமாகும்.

உலகப் பொருளாதார கண்ணோட்டம் கடந்த அக்டோபர் மாத அறிக்கையில் உலக அளவில் குறிப்பிடத்தகுந்த பொருளாதாரச் சுணக்கம், உற்பத்தி, விற்பனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியா வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று உலகப் பொருளாதார கண்ணோட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்து முதலீட்டுக்கான சூழலை மேம்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறும். உலக வங்கியின் அறிக்கையின் படி எளிதாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், இந்தியா 77-வது இடத்தில் இருந்து 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது''.

இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT