காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இறந்த நாளில் காந்தியைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த வியாழன் அன்று சில செயற்பாட்டாளர்கள் நாதுராம் கோட்சேவின் 70வது நினைவு நாளை அனுசரித்தனர். கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்தியதோடு மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததை அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று அவர்கள் மீது மத்திய பிரதேச போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி நாத்தூராம் விநாயக் கோட்சே மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் 1949 ல் நவம்பர் 15 அன்று தூக்கிலிடப்பட்டார். கோட்சே நினைவாக குவாலியரில் உள்ள இந்து மகாசபா ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோட்சேவை வணங்கி வருகின்றனர். குவாலியரில் அவரது சிலையை 2017 இல் நிறுவ முயன்றபோது மாநில அரசு அதைக் கைப்பற்றி சிலை அமைக்க தடை விதித்தது.
குவாலியர் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்து மகாசபை நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்குதான் காந்தியைக் கொல்ல கோட்சே துப்பாக்கி வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டும் கடந்த வியாழன் அன்று கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில் அவரது ஆதரவாளர்கள் கோட்சே படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வணங்கினர். அத்துடன் மகாத்மா காந்தியைப் பற்றியும் ஆட்சேபகரமான வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை அவர்கள் விநியோகம் செய்துள்ளனர்.
காந்தியைப் பற்றி இழிவான கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகித்தது காந்தியை இழிவுபடுத்தியுள்ளதாகவும் இதனால் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றும் மற்றவர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும் கூறி காங்கிரஸ் ஆர்வலர் ரவீந்திர சவுகான் என்பவரால் குவாலியர் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கூடுதல் காவல்துறைத் தலைவர் ராஜபாபு சிங் கூறுகையில், ''காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகித்தது கண்டிக்கத்ததாகும். மகாத்மாவை இழிவுபடுத்தியுள்ளவர்களின் தலைவர் ரேஷ் பாதம் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய சிறப்புப் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளது, அவரை யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்'' என்றார்.