ஒரு பழைய தகராறு தொடர்பாக 37 வயதான தலித் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது லெஹ்ரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசியின்படி பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடத்தல் மற்றும் தவறான முறையில் சிறைவைக்கப்படுதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாபின் சாங்ரூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
சங்கலிவாலா கிராமத்தின் தலித் பிரிவைச் சேர்ந்தவர் ஜக்மெயில். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரிங்கு என்பவருக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது எனினும் இருவருக்குள்ளும் இருந்த பிரச்சினை பின்னர் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத் தகராறை மறக்காமல் ரிங்கு பழிவாங்க நேரம் பார்த்துள்ளதாகத் தெரிகிறது.
நவம்பர் 7ம் தேதி நைச்சியமாக பேசி ஜக்மெயிலை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் ரிங்கு. சரி, இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று சாதாரணமாக அவருடன் சென்றுள்ளார். ரிங்குடன் சில நண்பர்களும் அப்போது உடன் இருந்தனர்.
வீட்டிற்கு சென்றதும் ஒரு தூணில் ஜக்மெயிலை கட்டிப் போட்டு நான்கு பேரும் இரக்கமின்றி அடித்து உதைத்துள்ளனர். கத்தியால் வெட்டியுள்ளனர். எதிர்பாராத இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஜக்மெயில் அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு தண்ணீர் தருவதற்கு பதிலாக சிறுநீரை கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்கவைத்துள்ளனர்.
அருகில் இருந்த சில வீடுகளிலிருந்து சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (பிஜிஐஎம்ஆர்) அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். டாக்டர்களின் கூற்றுப்படி, அவரது கால்கள் வெட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே ஜக்மெயில் உயிரிழந்ததை அடுத்து, நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளும் உள்ளூர் மக்களும் துணை ஆட்சியர் (எஸ்.டி.எம்) அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டக்காரரான கர்னைல் சிங் நிலோவால் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''இறந்தவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நீதி கேட்டு போராடி வருகிறோம். வன்கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு இழப்பீடு வழங்குவதோடு அரசாங்க வேலையும் கோருகிறோம். அதுவரை உடலின் பிரேத பரிசோதனையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரது இறுதி சடங்கை நடத்த மாட்டோம்'' என்றார்.
காங்கிரஸ் தலைவர் பிபி ராஜீந்தர் கவுர் பட்டால் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்துவருகிறார்கள். இவ்வகையான கொடுமைகள் யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்'' என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை பஞ்சாப் எஸ்சி / எஸ்டி கமிஷன் கண்டித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில எஸ்சி கமிஷன் உறுப்பினர் புனம் காங்க்ரா கூறுகையில், ''நவம்பர் 12 ம் தேதி ஊடக செய்திகள் மூலம் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. இவ்வழக்கில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்கொள்ள வேண்டிய உரிய விசாரணை தாமதப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
எஸ்சி / எஸ்டி கமிஷனின் இன்னொரு உறுப்பினர், ''குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கோரி மத்திய அரசிடம் முறையிடுவேன்'' என்றார்.