சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் சாமி தரிசனத்துக்காக கார்த்திகை முதல்நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்கள் வரை குவிந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை பூஜையுடன் திறக்கப்பட்டது. அதன்பின் 18-ம் படி பூஜை முடிந்து இரவு நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதீர் நம்பூதிரி ஐயப்பனுக்குச் சிறப்புப் பூஜை, நெய் அபிஷேகம், மகா கணபதி ஹோமம் ஆகியவற்றைச் செய்து முறைப்படி நடையைத் திறந்தார்.
மலையாள மாதமான விருட்சகம் இன்று பிறந்ததையொட்டி நடந்த சிறப்புப் பூஜையில் மாநில தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் என். வாசு, டிடிபி உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி, ஆணையர் ஹர்ஸன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜைக்காகத் திறந்திருக்கும். அதன்பின் 3 நாட்கள் நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30-ம்தேதி மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதிவரை திறந்திருக்கும்.
சபரிமலையில் கார்த்திகை முதல்நாளான இன்று தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடிகட்டி வந்தவாறு உள்ளனர். முதல்நாளில் இன்று சன்நிதானத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. ஏறக்குறைய 3 மணிநேரம்வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், தேவஸம்போர்டு அமைச்சர் சுரேந்திரன், அதிகாரிகளுடனும், தேவஸம்போர்டு உறுப்பினர்களுடன் சன்நிதானத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, போலீஸார் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
சபரிமலை சீசனுக்காக போலீஸார் பாதுகாப்பு 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பிரிவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் 10 போலீஸ் எஸ்.பி.க்கள், 30 ஆய்வாளர்கள், 120 துணை ஆய்வாளர்கள், 1400 தலைமைக் காவலர்கள் ஆகியோர் சன்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதுதவிர ஆந்திராவில் இருந்து 10 போலீஸார், 135 அதிவிரைவு படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் இருந்து 45 பேர் இன்று சன்நிதானத்தில் உள்ளனர்.
சபரிமலையில் உள்ள போலீஸார் தெரிவிக்கையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டும், முதல்நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பக்தர்களையும், போராட்டக் காரர்களையும் சமாளிக்க 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
நிலக்கல் பகுதியில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அனைத்து பக்தர்களும் அரசு பேருந்து மூலம் பம்பைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பம்பைக்கு எந்த பக்தர்களின் வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
நிலக்கல் பகுதியில் இருந்து பம்பைக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல 816 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவிக்கின்றனர்