பெங்களூரு
கோலார் தங்கவயல் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 35 இடங்களில் 30-ல் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் நகராட்சியில் உள்ள 35 வார்டுகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.
அதில் காங்கிரஸ் 13 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து பாஜக 3, மஜத, இந்திய குடியரசுக் கட்சி தலா 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுயேச்சை வேட் பாளர்கள் 14 இடங்களில் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ், பாஜக, இந்திய குடியரசு கட்சி, சுயேச்சைகள் உட்பட வெற்றிபெற்ற 35 பேரில் 30 பேர் தமிழர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகராட்சிக்கு தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் கர்நாடக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோலார் தங்கவயல் நகராட்சி யில் பெரும்பான்மைக்கு 18 இடங்கள் தேவை. இந்நிலையில் சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது.
இடைத்தேர்தலில் தமிழர்..
கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் சிவாஜிநகர் வேட் பாளராக முன்னாள் கவுன்சிலரும், தமிழருமான சரவணாவை பாஜக அறிவித்துள்ளது. தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்த இவர் அல்சூர் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அந்த தொகுதி மகளிருக்காக ஒதுக்கப் பட்டதால் தன் மனைவி மம்தாவை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.