இந்தியா

சுயலாபத்துக்காக பத்திரிகை தொடங்கும் கட்சிகள்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வருத்தம்

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்களை தொடங்குகின்றன. இதனால் ‘பத்திரிகை தர்மம்' குறைந்து வருகிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகையாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்திய பிரஸ் கவுன்சில் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ஊடக துறையில் போலி செய்தி கள், பணம் கொடுத்து செய்தி களை வெளியிடுவது, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது ஆகியவை மிகப்பெரும் பிரச் சினைகளாக உருவெடுத்துள்ளன. தங்களின் சுயலாபத்துக்காக அரசியல் கட்சிகளும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் நாளிதழ், தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி வருகின்றன. இதனால் பத்திரிகை தர்மம் குறைந்து வருகிறது.

ஜனநாயகத்தின் காவலனாக, கண்காணிப்பாளராக ஊடகங்கள் செயல்பட வேண்டும். மக்களுக் காக மட்டுமே சேவையாற்ற வேண்டும். உண்மையை எதற் காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவருமே பத்திரிகையாளர் கள். ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதியால், சமூக வலை தளங்களில் தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன. அதேநேரம் வதந்திகளும் போலி செய்திகளும் அதிகமாகப் பரப்பப்படுவது கவலையளிக்கிறது.

மக்களுக்கு பயன் தரும் செய்திகள், தகவல்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக வளர்ச்சி சார்ந்த திட்டங்கள், வேளாண் துறை சார்ந்த செய்திகளை அதிகமாக வெளியிட வேண்டும். ஊழல் ஒழிப்பு, பாலின பாகுபாடு, ஜாதி பாகுபாட்டை களைய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT