கான்பூர்,
மனிதர்களை அடுத்து இப்போது, காற்று மாசுபாடு அதிகரிப்பது வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கான்பூர் விலங்கியல் பூங்காவில் நச்சு வளிமண்டலம் விலங்குகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான மாசுபாடு காரணமாக மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். முகக்கவசம் அணிந்து அவர்கள் வெளியே வரும் சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தைகளின் மூளையை இது பாதிக்கும் என ஐநாவின் யூனிசெஃப் எச்சரித்தது.
மனிதர்களை அடுத்து தற்போது காற்று மாசுபாடு விலங்குகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் சரணாலயத்தில் இறக்கும் விலங்குகளில் காற்று மாசு சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து கான்பூர் மிருகக்காட்சிசாலையின் கால்நடை அதிகாரி ஆர்.கே. சிங் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கூறியதாவது:
"மாசு நேரடியாக பாதிக்காது. மனிதர்களைப் போலவே, இது விலங்குகளையும் மெதுவாகக் கொல்கிறது. இருப்பினும், மாசு காரணமாக எந்த மிருகத்தின் மரணத்தையும் நாங்கள் காணவில்லை, ஆனால் ஒரு புலியின் நுரையீரலில் நிறைய அழுக்கு துகள்கள் காணப்பட்டன, அந்தப் புலி கடந்த மாதம் இயற்கை மரணம் அடைந்தது. அப்புலியின் நுரையீரலில் வேறு சில வெளிப்புற தூசுகளும் சிக்கியிருந்தன. மாசுபாட்டின் விளைவு அதற்கு முன்னர் இறந்த மற்ற விலங்குகளிலும் காணப்பட்டது. விலங்குகள் இங்கு உயிரிழந்து வருவதற்கான காரணம் காற்று மாசுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.
''ஒலி மாசுபாடு அதிகரிப்பது மலைக் கரடிகள் மற்றும் காண்டாமிருகங்களை இனச்சேர்க்கை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்த விலங்குகளுக்கு அத்தகைய நேரத்தில் சத்தமில்லாத சூழ்நிலையின் அரவணைப்பை விரும்புகின்றன. ஆனால் சத்தம் காரணமாக அவை தங்கள் துணைகளின் அருகில் செல்வதில்லை. இனச்சேர்க்கைக்கு உதவும் சாதகமான சூழ்நிலையின்போது அவை தனித்துவமான ஹார்மோன்களை வெளியிடுகின்றன. ஆனால் ஒலி மாசு அவர்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது.
மிருகக்காட்சிசாலையின் உதவி இயக்குநர் ஏ.கே. சிங் கூறினார்: “கான்பூரில் உள்ள விலங்குகளை சத்தம் மற்றும் காற்று மாசுபாடு கடுமையாக பாதிக்கிறது. இதனால் அந்த விலங்குகள் நடுநடுங்குகின்றன அல்லது சோம்பேறியாகி வருகின்றன. மேலும்,இடைவிடாமல் நடந்துவரும் கட்டுமானப் பணிகளும் விலங்குகளின் சங்கடத்தை அதிகரிக்கின்றன.''
கான்பூர் மிருகக்காட்சிசாலையின் அருகே புதிய சாலைவழி பஸ் டெர்மினஸ் கட்டுமானப் பணி விலங்குகளை மிகவும் தொந்தரவு செய்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கட்டுமானத்தை நிறுத்தியது, ஆனால் இப்போது அதை மீண்டும் தொடங்க நிபந்தனை அனுமதி அளித்துள்ளது.