இந்தியா

அறக்கட்டளைக்காக அயோத்தி சாதுக்கள் இடையே முற்றும் மோதல்: வாட்ஸ்அப் சர்ச்சை உரையாடலால் போலீஸார் தலையீடு

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

அறக்கட்டளை தன்னை தலைவ ராக்க வலியுறுத்தி ராம்விலாஸ் வேதாந்தி, ஒரு சாதுவிடம் பேசிய தொலைபேசியின் சர்ச்சை உரை யாடல் தற்போது வைரலாகி வருகிறது. இதனால், அயோத்தி சாதுக் கள் இடையே உருவான மோதல் முற்றி உத்தரபிரதேச போலீஸாரின் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளது.

அயோத்தி வழக்கில் கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்கும் படி தனது தீர்ப்பில் உத்தரவிட்டது. இதன்மூலம், இந்து-முஸ்லிம் பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டு வரும் நிலையில், அயோத்தி சாதுக்கள் இடையே புதிதாக ஒரு பிரச்சினை உருவாகி உள்ளது. விஷ்வ இந்து பரிஷத்தின்(விச்பி) நிர்வாகத்தில் உள்ள ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் நிருத்திய கோபால்தாஸ் உள்ளிட்ட சிலர் புதிய அறக்கட்டளை தேவை யில்லை எனவும், தமது அமைப்பே கோயிலைக் கட்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

வேறு சில மடங்களில் உள்ள சாதுக்கள், அரசு அமைக்கும் அறக் கட்டளையில் முக்கிய அங்கம் வகிப்பதில் போட்டியிட்டு வருகின்ற னர். இதுபோல் சாதுக்களுக்கு இடையிலான போட்டி, கடும் மோதலாக உருவெடுத்து செய்தி நேற்று முன் தினம் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது.

இந்நிலையில், அறக்கட்டளை பிரச்சினை குறி்த்து அயோத்தியின் சிலதினங்களுக்கு முன் இரு சாதுக்கள் பேசிய உரையாடல் பதிவாகி வாட்ஸ்-அப்பில் வைர லாகி வருகிறது. இதில், தன்னிடம் பேசிய அயோத்தியின் தபஸ்வீ சாவ்னி கோயில் மடத்தின் தலைவ ரான பரமஹன்ஸ் தாஸிடம் தன் னையே அறக்கட்டளையின் தலைவ ராக்க வலியுறுத்த வேண்டும் என ராம்விலாஸ் வேதாந்தி உத்தர விட்டுள்ளார். ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸின் நிர்வாகக்குழு உறுப்பின ரான வேதாந்தி, பாஜகவின் முன் னாள் எம்.பியாக இருந்தவர். இவர், கடந்த செப்டம்பர் 2007-ல் ராமரை இழிவாகப் பேசியதாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் கழுத்தை துண்டிப்பதாகக் கூறி சர்ச்சையை கிளப்பியவர்.

இவரிடம் பரமஹன்ஸ் தாஸ் தன் உரையாடலில் நிருத்திய கோபால் தாஸை மிகவும் தரக் குறைவாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு அமைக்கும் அறக் கட்டளையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் உறுப் பினராக்க சில சாதுக்கள் வலி யுறுத்தி வருகின்றனர். இதையும் கண்டித்த சாதுக்கள், வேறு ஒரு மடத்தை சேர்ந்த யோகியை அதில் உறுப்பினராக்கக் கூடாது என்றும் பேசிக் கொண்டனர். இவர்கள் உரையாடல் பதிவு செய்யப்பட்டு அயோத்தியின் சாதுக்கள் கைப்பேசிகளின் வாட்ஸ்அப்பில் நேற்று முன்தினம் வைரலானது.

இவர்கள் உரையாடலை கேட்டு கொதித்து எழுந்த நிருத்திய கோபால் தாஸின் ஆதரவாளர்கள், பரமஹன்ஸின் தபஸ்வீ சாவ்னியை சுற்றி வளைத்து போராட்டம் நடத் தினர். இதில் சிலர் பரமஹன்ஸை தாக்க முயற்சிக்க அவர் போலீ ஸாரை உதவிக்கு அழைத்ததால் தப்பினார். பிறகு தரக்குறைவாக நிருத்திய கோபால் தாஸை பேசியதற்காக பரமஹன்ஸ் தாஸ், போலீஸாரால் கைது செய்யப்படும் நிலைக்கும் உள்ளானார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அயோத்யா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் திவாரி கூறும்போது, ‘நிருத்திய கோபால் தாஸ்ஜி மீதான உரையாடல் குறித்து எவரும் புகார் அளிக்கவில்லை என்பதால் பரமஹன்ஸ் தாஸ்ஜியை காவல் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பி விட்டோம். இவருக்கு ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை. இப்போது அவர் பாபா விஷ்வநாத் தரிசனத்துக்காக வாரணாசி சென்றுள்ளார்’ என்றார்.

இதனிடையே, ராமர் கோயிலுக்கான போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்து வந்த விஎச்பி நிர்வாகிகள் இடையே இருவேறு கருத்து உருவாகி உள்ளது. ஒரு சாரார் கோயில் கட்டும் பொறுப்பை உ.பி. அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். மற்றொரு பிரிவினர் தமது அறக்கட்டளையே அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT