போபால் விஷவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வந்த செயற்பாட்டாளர் அப்துல் ஜபார் உடல் நலமின்றி நேற்று காலமானார்.
போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜபார் கடும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். வாயுப் பிரச்சினையால் சமீபகாலங்களில் அவரது கண் பார்வையும் 50 சதவீதம் இழக்க நேரிட்டது.
இந்நிலையில் ஜபார் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ''செயற்பாட்டாளர் அப்துல் ஜபாருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். அவர் விரைவில் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்'' என நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்பாராத நுரையீரல் பிரச்சினை அதிகரிக்கவே நேற்றிரவு அவர் மருத்துவமனையிலேயே காலமானார்.
போபாலில் 2010-ல் போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன்' சார்பில் ஜபார் நடத்திய எதிர்ப்புப் பேரணி
போபால் விஷவாயுக் கசிவு
போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இரவு அங்குள்ள யூனியன் கார்பைடு எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென நச்சுவாயு கசிந்தது. நச்சு வாயு போபால் நகரம் முழுவதும் பரவி உடனடி உயிரிழப்பாக 2,259 பேரும் அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் விஷவாயுவின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த துர்சம்பவத்தில் அப்துல் ஜபாரின் பெற்றோரும் உயிரிழந்தனர். போபால் விஷவாயுக் கசிவினால் உயிரிழந்த ஆயிரக் கணக்கானவர்களுக்காகவும் உயிர் பிழைத்தவர்களுக்காகவும் நீதி கிடைக்கவும் தகுந்த நிவாரணம் பெறவும் 'போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன்' என்ற அமைப்பை ஜபார் தொடங்கினார்.
பழைய போபாலில் ஜபார் பாய் என்று அன்போடு அழைக்கப்படும் அப்துல் ஜபார், உரிய இழப்பீடு கோரி போபாலில் ஏராளமான போராட்டங்களை நடத்தினார். இது தவிர புதுடெல்லியில் அவர் நடத்திய எதிர்ப்புப் பேரணிகள் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பேரழிவு விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளைத் தொடங்கி அவர்களின் மறுவாழ்வுக்கு ஜபார் உறுதுணையாக இருந்தார்.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் முதன்மை அதிகாரி வாரன் ஆண்டர்சன் இவ்வழக்கின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படுவார் என நாடே எதிர்பார்த்த நிலையில், பிணையில் அமெரிக்கா சென்றவர் திரும்பி வரவேயில்லை. இழப்பீடு குறித்து வாய் திறக்காத அமெரிக்கா, ஆண்டர்சனுக்கு ஆதரவாக இருந்தது. அவர் கடந்த 2014-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் நீதி கேட்டுப் போராடிய செயற்பாட்டாளர் அப்துல் ஜபாரின் மரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ள நிலையில், அவரால் பலனடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரை இழந்து வாடுவதாகவும் போபால் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஏஎன்எஸ்